வெயில் காலத்தில் வயிற்றுப் போக்கு ஏற்படுவது ஏன்?

கொளுத்துற வெயில்ல வர்ற நோய்களும் நிறைய இருக்குங்க. வியர்க்குரு, தோல் வியாதிகள், உடல் சூடு..இப்படி.

அதிப்படியான வெப்பத்தினால் மனித உடலுக்கு தீங்கு அதிகம். அப்படி கோடைகாலத்தில் வர்ற ஒரு பாதிப்புதான் வயிற்றுப் போக்கு. இது எதனால் வருது? எப்படி அதிலிருந்து விடுபடலாம்னு இயற்கையான வைத்திய முறைகளை தெரிஞ்சுக்குவோம்.

கோடை காலத்தில் உண்டாகிற கடுமையான வெப்பத்தின் காரணமாகச் சரும நோய்கள் மட்டுமன்றி வயிற்றிலும் பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. அவற்றில் ‘கோடை கால வயிற்றுப்போக்கு’ (Summer Diarrhea) முக்கியமானது.

காரணம் என்ன? குடலில் செரிமானத்துக்கு உதவுகிற என்சைம்கள் வெப்பக் காலத்தில் குறைவாகச் சுரப்பதால், இந்த வகை வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. அடுத்து, வெப்பம் நிறைந்த பருவநிலையில் சில பாக்டீரியாக் கிருமிகள் வளர்ச்சி அடைவது அதிகரிக்கிறது.

நாம் பயன் படுத்தும் குடிநீர், உணவில் இவை கலந்து வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. விப்ரியோ காலரா, எஸ்செரிச்சியா கோலி, சிகெல்லா, சால்மோனெல்லா, ரோட்டா வைரஸ், ஆஸ்டியோ வைரஸ், அடினோ வைரஸ், நார்வா வைரஸ், எண்டிரோ வைரஸ், அமீபா, ஜியார்டியா, குடல் புழுக்கள் ஆகியவை வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் முக்கியக் கிருமிகள்.

இந்தக் கிருமிகள் எல்லாமே வயிற்றுப்போக்கு ஏற்பட்ட வரின் மலத்தில் வசிக்கும். மாசடைந்த உணவு, குடிநீர் மூலம் இவை நேரடியாக அடுத்தவரை வந்தடையும்போது, அவருக்கும் நோய் உண்டாகிறது. இந்தக் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும் கழிப்பறை இருக்கைகள், கதவுப்பிடிகள், குழாய்கள் போன்றவற்றை அடுத்தவர்கள் தொடு வதன் வழியாகவும் நோய் உண்டாகலாம்.

ஈக்களும் எறும்புகளும் இந்தக் கிருமிகளை மனிதருக்குப் பரப்புகின்றன. இவை மனிதக் கழிவின்மீது அமரும் போது அவற்றின் மீது கிருமிகள் ஒட்டிக்கொள்ள, அதன் பின்னர் இவை உணவுப் பொருட்களை மொய்ப்பதன் மூலம் கிருமிகள் உணவுக்குப் பரவி, அதை உட்கொள்ளும் மனிதருக்குப் பரவுகின்றன.

இவை தவிர நச்சுணவு, அஜீரணம், ஊட்டச்சத்துக் குறைவு, நாட்பட்ட பயணம், பசும்பால் புரதம் ஒவ்வாமை, லாக்டோஸ் ஒவ்வாமை, கல்லீரல் மற்றும் கணையப் பாதிப்பு, எய்ட்ஸ் நோய் போன்றவற்றால் சாதாரணமாகவே வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

உருவாகும் முறை கிருமிகள் நேரடியாகவோ, சில நச்சுப் பொருட்களைச் சுரந்தோ சிறுகுடலையும் பெருங்குடலையும் தாக்கும்போது, அதற்கு எதிர்விளை வாகக் குடலில் அதிக அளவில் திரவம் சுரக்கிறது. இது வயிற்றுப்போக்காகக் குடலிலிருந்து வெளியேறுகிறது.

அப்போது குடலில் உள்ள தண்ணீர்ச் சத்தும் சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுச் சத்துகளும் வெளியேறி விடுகின்றன. இதன் விளைவாக உடலில் கடுமையான நீரிழப்பு (Dehydration) ஏற்படுகிறது. மேலும் கிருமிகளால் பாதிக்கப்பட்ட குடல், உணவுச் சத்துகளைச் சரியாக உறிஞ்சத் தவறுகிறது.

இதனால் நோயாளிக்கு ஊட்டச்சத்து குறைந்து, நோய் எதிர்ப்பாற்றல் குறைகிறது. இக்காரணத்தால் வயிற்றுப்போக்கு மேலும் தீவிரமடைகிறது. அறிகுறிகள் இந்த நோயின் ஆரம்பத்தில் தண்ணீர்போல மலம் போகும். அதிகத் தாகம் எடுக்கும், நாக்கு வறண்டுவிடும், வாய் உலர்ந்துவிடும், தோல் உலரும், கண்களுக்குக் கீழே குழி விழும்.

இவற்றின் தொடர்ச்சியாகச் சிறுநீரின் அளவு குறையும். நாடித்துடிப்பு பலவீனமடையும், ரத்த அழுத்தம் குறையும், கிறுகிறுப்பு, மயக்கம் வரும். கை, கால்கள் சில்லிட்டுவிடும். சிலருக்குக் காய்ச்சல், உடல்வலி, வாந்தி, வயிற்றுவலி போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும்.

குழந்தைகளுக்கே அதிகப் பாதிப்பு! இந்த நோய், பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்வரை எவரையும் பாதிக்கலாம் என்றாலும், நடைமுறையில் ஆறு மாதத்திலிருந்து இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

அசுத்தமான இடங்களிலும் மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகளையும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளையும் இது எளிதாகத் தாக்கிவிடும். குழந்தைகளுக்குப் பாட்டிலில் பால் கொடுக்கும்போது, அந்தப் பாட்டிலைச் சரியாகக் கழுவிக் கிருமி நீக்கம் செய்யாவிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படுவது வழக்கம்.

பிளாஸ்டிக் டப்பாக்களில் பால் தருவது, மலம் கழித்துவிட்டுக் கையைச் சுத்தமாகக் கழுவாமல் குழந்தைகளைக் கொஞ்சுவது போன்றவற்றாலும் இது ஏற்படுவதுண்டு. சில குழந்தைகள் எந்த நேரமும் வாயில் ரப்பரைத் திணித்துக்கொள்வார்கள். சுத்தம் பேணப்படாத அந்த ரப்பர் மூலமும் கிருமிகள் பரவி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

பெரியவர்களோடு ஒப்பிடும்போது, குழந்தைகளுக்கு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு கொஞ்சம் குறைவு. பெரியவர்களின் வயிற்றுக்கு வந்துசேரும் பெரும்பாலான கிருமிகளை அமிலமே அழித்துவிடும்.

குழந்தைகளுக்கு இவ்வாறு கிருமிகள் அழிக்கப்படுவது குறைவு. வயிற்றுப்போக்கால் குழந்தைகள் அதிகம் அவதிப்படுவதற்கு, இதுவும் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்லலாம். அடுத்து, குழந்தைகளுக்குக் குடலின் நீளம் மற்றும் பரப்பளவு உடலின் பரப்பளவோடு ஒப்பிடும்போது அதிகம்.

ஆகையால், குழந்தைகளின் குடலிலி ருந்து வெளியேறும் வயிற்றுப்போக்குத் திரவத்தின் அளவும் அதிகம். எடுத்துக்காட்டாக, 6 கிலோ எடையுள்ள ஒரு குழந்தையின் உடலிலிருந்து வெளியேறும் ஒரு லிட்டர் திரவத்தால் உண்டாகிற பாதிப்பு மிக அதிகம்.

அதேவேளையில், 60 கிலோ எடையுள்ள ஒருவருக்கு ஒரு லிட்டர் திரவ இழப்பால் ஏற்படும் பாதிப்பு குறைவு. இதனால்தான் இந்த நோய்க்குக் குழந்தைகள் பெரிதும் பலியாகின்றனர். சிகிச்சை என்ன? நோயாளியின் மலத்தைப் பரிசோதித்தால் நோய்க் கிருமியின் வகை தெரியும். அதற்கேற்பச் சிகிச்சை தரப்படும். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு முதலில் நீரிழப்பைச் சரி செய்ய வேண்டும்.

இதற்கு அதிக அளவில் சுத்தமான நீரை நோயாளி பருக வேண்டும். அல்லது உப்பு, சர்க்கரைக் கரைசலைப் பருக வேண்டும். இக்கரைசலை வீட்டிலேயே தயாரித்துக்கொள்ள முடியும். ஐந்து நிமிடங்களுக்குக் கொதிக்க வைத்து, ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரை, 5 கிராம் உப்பு கலந்து, ஒரு மணி நேரத்துக்கு 500 மி.லி. அளவில் குடிக்கத் தரலாம். இதுவே கடைகளில் எலெக்ட்ரால், மினரோலைட், காஸ்லைட், புரோலைட் என்ற வர்த்தகப் பெயர்களில் கிடைக்கிறது.

இவற்றில் ஒன்றையும் பயன்படுத்தலாம். இவை பலன் தராத நிலையில் நோயாளியை மருத்துவமனையில் சேர்த்து, குளுகோஸ் மற்றும் ‘சலைன்’ செலுத்த வேண்டும். அத்துடன் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் மற்றும் ஓரணுயிரி எதிர் மருந்துகள் (Antiprotozoans) செலுத்தப்பட வேண்டும்.

ரோட்டா வைரஸ் போன்ற வைரஸ் காரணமாக ஏற்படும் வயிற்றுப்போக்குக்குத் தனிப்பட்ட மருந்து எதுவுமில்லை. இந்த வகை வயிற்றுப்போக்கு சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். அதுவரை நோயாளியின் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதும், நீரிழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்டச் சலைன் செலுத்தி சிகிச்சையைத் தொடர வேண்டியதும் முக்கியம். தாய்ப்பால் முக்கியம்!

சிறு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருந்தால், தாய்ப்பால் தருவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. தேவைப் பட்டால் மருத்துவர் யோசனைப்படி தாய்ப்பால் தருகிற இடைவெளியை அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதேநேரம் பாட்டில் பாலைக் கண்டிப்பாக நிறுத்திவிட வேண்டும். மருத்துவர் யோசனைப்படி உப்புச் சர்க்கரைக் கரைசலை 10 நிமிடத்துக்கு ஒருமுறை ஒரு தேக்கரண்டி அளவுக்குக் குழந்தையின் நாக்கின் அடியில் விடலாம்.
குழந்தைக்கு 8 மணி நேரத்துக்குள் வயிற்றுப்போக்கு நிற்காவிட்டால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை தர வேண்டும்.
உணவு முறை
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட வருக்கு வாந்தி அவ்வளவாக இல்லை எனும் நிலைமையில், ஊட்டச்சத்தும் நீர்ச்சத்தும் குறைந்துவிடாமல் இருக்க அரிசிக் கஞ்சி, ஜவ்வரிசிக் கஞ்சி, ஆரூட் கஞ்சி, பொட்டுக்கடலைக் கஞ்சி, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர் போன்றவற்றில் ஒன்றை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகத் தரலாம்.

அதிகம் காரம் உள்ள உணவு வகைகளையும் கொழுப்பு உணவையும் குறைந்தது ஒரு வாரத்துக்குத் தவிர்க்க வேண்டும். துத்தநாகம் (Zinc) கலந்த சொட்டு மருந்தை இரண்டு வாரங்களுக்குத் தரலாம். லாக்டோஸ் ஒவ்வாமை உள்ள குழந்தைக்குச் சோயா கலந்த பால் பவுடரைத் தரலாம்.



Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்