தைராய்டு பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் remedy for tyroid problem

remedy for tyroid problem

தைராய்டு உங்கள் கவனத்திற்கு


கர்ப்பமாகி ஓரிரு மாதங்களிலேயே கருச்சிதைவு ஏற்பட்டதால் சாரா மிகவும் மனமுடைந்து போனார். சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, திரும்பவும் அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. பல மருத்துவப் பரிசோதனைகள் செய்தும் காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. சில வருடங்களில், சாராவின் உடல் பருக்க ஆரம்பித்தது; பார்த்துப் பார்த்து உணவைச் சாப்பிட்டும், தவறாமல் உடற்பயிற்சி செய்தும்கூட இப்படி ஆனது.

அதுமட்டுமல்ல, காலில் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டது, குளிர் தாங்க முடியாமல் போனது. கடைசியில், இரத்தப் பரிசோதனைகளும் தைராய்டு சுரப்பியின் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையும் செய்ததில் அவருக்கு ஹாஷிமோட்டோ தைராய்டிடிஸ் எனப்படும் வியாதி இருப்பது தெரிந்தது; அதுவே அவருக்கு ஏற்பட்ட கருச்சிதைவுகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.*

அநேகரைப் போல சாராவும் ஆரம்பத்தில் தைராய்டைப் பற்றிக் கவலைப்பட்டதே இல்லை. ஆனால், அவருடைய உடல்நிலை மோசமடைந்த பிறகுதான், அந்தச் சுரப்பி எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டார்.

தைராய்டு சுரப்பி


தைராய்டு என்பது கழுத்தில் குரல்வளைக்குச் சற்றுக் கீழே பட்டாம் பூச்சி வடிவில் அமைந்துள்ள சிறிய சுரப்பி ஆகும். இரண்டு மடல்களைக் கொண்டதும் 28 கிராமுக்கும் குறைவான எடையுள்ளதுமான தைராய்டு, மூச்சுக்குழலோடு சேர்ந்து பிணைக்கப்பட்டுள்ளது.

இது, நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் பாகமானது; எந்தெந்த உள்ளுறுப்புகளும் திசுக்களும் ஹார்மோன்களை உற்பத்தி செய்து, சேமித்து வைக்கின்றனவோ அவற்றின் தொகுதியே நாளமில்லாச் சுரப்பி மண்டலமாகும். இது, ரசாயனத் தூதுவர்களான ஹார்மோன்களை இரத்தத்தில் நேரடியாகக் கலக்கிறது.

தைராய்டில் எண்ணற்ற சின்னஞ்சிறு குமிழ்கள் உள்ளன; அவை, தைராய்டு ஹார்மோன்களைக் கொண்ட அடர்த்தியான திரவத்தால் நிறைந்துள்ளன. இந்த ஹார்மோன்களில் அதிகளவு அயோடின் உள்ளது. சொல்லப்போனால், உடலிலுள்ள அயோடினில் கிட்டத்தட்ட 80 சதவீதம் தைராய்டில்தான் இருக்கிறது. உணவில் அயோடின் குறைவுபட்டால், தைராய்டு விரிவடைவதற்கு, அதாவது கழலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இளம் பிள்ளைகளுக்கு அயோடின் குறைவுபட்டால் ஹார்மோன் உற்பத்தி தடைபடும்; அதனால், உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் பாலின வளர்ச்சியும் குன்றிவிடும். இது, உடல் வளர்ச்சிக் குறை நோய் (கிரெட்டனிஸம்) என்றழைக்கப்படுகிறது.

தைராய்டு ஹார்மோன்களின் செயல்பாடு


தைராய்டு ஹார்மோன்களில், T3, RT3 (ரிவர்ஸ் T3), T4* என்ற வகைகள் உண்டு. T3, RT3 வகைகள் இரண்டுமே T4 வகையிலிருந்து உருவாகின்றன. இவை முக்கியமாக, தைராய்டில் அல்ல, உடலின் மற்ற திசுக்களில் உருவாகின்றன. ஆகவே, உடலுக்கு அதிக தைராய்டு ஹார்மோன்கள் தேவைப்படுகையில், தைராய்டு சுரப்பி T4 ஹார்மோனை இரத்தத்தில் கலக்கிறது. அங்கிருந்து, T4 ஹார்மோனும் அதன் கிளைப்பொருள்களும் உடலின் எல்லாச் செல்களையும் கட்டுப்படுத்தலாம்.

ஒரு காரின் வேகத்தை ஆக்சிலரேட்டர் கட்டுப்படுத்துவது போல உடலின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை தைராய்டு ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன; அதாவது, செல்களில் ஆற்றலையும் புதிய திசுக்களையும் உருவாக்குகிற ரசாயன செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன. இவ்வாறு, தைராய்டு ஹார்மோன்கள் திசு வளர்ச்சிக்கும் அதன் சீரமைப்புக்கும் உதவுகின்றன, இதயம் இயங்கும் வேகத்தைக் கட்டுப்படுத்துகின்றன; அதோடு, தசைகளுக்கும் உடல் உஷ்ணத்திற்கும் தேவையான ஆற்றலின் உற்பத்தியைக் கவனித்துக்கொள்கின்றன.

தைராய்டு ஹார்மோன்கள் இன்னும் சில முக்கிய வேலைகளையும் செய்கின்றன. உதாரணமாக, இரத்தத்திலுள்ள அதிகப்படியான ட்ரைகிளிசரைடுகளையும் குறைந்த அடர்த்திக் கொழுப்புப் புரதங்களையும் (கெட்ட கொலஸ்ட்ரால்) வெளியேற்ற அவை கல்லீரலுக்கு உதவுகின்றன. இந்த கொலஸ்ட்ரால் பித்தநீருக்கும் அங்கிருந்து மலக்குடலுக்கும் அனுப்பப்படுகிறது. மறுபட்சத்தில், தைராய்டு ஹார்மோன் மிகக் குறைவாக இருந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகி, உயர் அடர்த்திக் கொழுப்புப் புரதங்கள் (நல்ல கொலஸ்ட்ரால்) குறைந்துவிடும்.

தைராய்டு ஹார்மோன்கள், உணவுப் பாதையில் ஜீரண நீர்களின் உற்பத்தியைத் துரிதப்படுத்துகின்றன; அதோடு, அலை போன்ற தசைச் சுருக்க இயக்கங்களையும் (பெரிஸ்டால்சிஸ்) அதிகப்படுத்துகின்றன. ஆகவே, தைராய்டு ஹார்மோன் அளவுக்கதிகமாகிவிட்டால், அடிக்கடி மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம், மலச்சிக்கல் மிக அரிதாகவே ஏற்படலாம்.

தைராய்டைக் கட்டுப்படுத்துவது எது?


மூளையிலுள்ள ஹைப்போதாலமஸ் என்றழைக்கப்படும் பகுதிதான் தைராய்டைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த ஹைப்போதாலமஸ், தைராய்டு ஹார்மோன்களுக்கான தேவை இருப்பதைக் கண்டறிந்தால், அருகிலுள்ள பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் கொடுக்கிறது; இந்தச் சுரப்பி, மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இது, ஹார்மோன்களை உற்பத்தி செய்யும்படி தைராய்டுக்கு சிக்னல் கொடுப்பதற்காக, தைராய்டு சுரப்பித் தூண்டு ஹார்மோனை (TSH) இரத்தத்தில் கலக்கிறது.

ஆகவே, இரத்தத்தில் TSH மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் அளவுகளைக் கணக்கிடுவதன் மூலம் தைராய்டின் செயல்பாட்டையும் நம்முடைய உடல்நிலையையும் பற்றி டாக்டர்களால் சொல்ல முடியும். தைராய்டு பிரச்சினைகள் வரலாம் என்பதால் டாக்டர்களிடம் பரிசோதித்துக்கொள்வது முக்கியம்.

தைராய்டு சரியாக வேலை செய்யாதபோது


தைராய்டு பிரச்சினைக்கு, உணவில் அயோடின் சத்து குறைவுபடுவது, உடல் ரீதியிலான அல்லது மன ரீதியிலான அழுத்தம், மரபியல் குறைபாடுகள், தொற்றுகள், நோய் (பொதுவாக, சுயதடுப்பாற்றல் நோய் [autoimmune disease]), பல்வேறு நோய்களுக்காகக் கொடுக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை காரணமாக இருக்கலாம்.* தைராய்டு வீங்கியிருப்பது நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அந்த வீக்கம் தைராய்டு சுரப்பி முழுவதும் பரவி இருக்கலாம், அல்லது கட்டிகள் வடிவில் இருக்கலாம்.

பொதுவாக, அது சாதாரண வீக்கமாக இருக்குமென்றாலும், எப்போதும் மருத்துவப் பரிசோதனை செய்வது முக்கியம்; ஏனென்றால், சில சமயங்களில் அது புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்க்கு அறிகுறியாகவும் இருக்கலாம்.*

பொதுவாக, சரிவர செயல்படாத தைராய்டு மிகக் குறைவாகவோ மிக அதிகமாகவோ ஹார்மோன்களை உற்பத்தி செய்யலாம். அதிகமாக உற்பத்தி செய்வது தைராய்டு மிகுதிநிலை என்றும் குறைவாக உற்பத்தி செய்வது தைராய்டு குறைநிலை என்றும் அழைக்கப்படுகின்றன. தைராய்டு நோய் படிப்படியாகவும் புலப்படாத விதத்திலும் ஏற்படலாம்; ஆகவே, பல வருடங்களாக அந்நோய் இருப்பது ஒருவருக்குத் தெரியாமல் போகலாம். பெரும்பாலான மற்ற நோய்களைப் போல, இதற்கும் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை அளித்தால் பலன் கிடைக்கலாம்.

ஹாஷிமோட்டோ தைராய்டிடிஸ், கிரேவ் நோய் ஆகியவையே பொதுவாக வருகிற தைராய்டு நோய்களாகும். இவை இரண்டுமே சுயதடுப்பாற்றல் நோய்களாகும்; தடுப்பாற்றல் மண்டலம் உடலிலுள்ள செல்களை அந்நிய திசுக்களாகக் கருதி அழித்துவிடுவதால் இவை இப்பெயர் பெற்றிருக்கின்றன. ஹாஷிமோட்டோ தைராய்டிடிஸ் என்ற நோய், ஆண்களைவிட பெண்களுக்கு ஆறு மடங்கு அதிகமாக வருகிறது; பொதுவாக, இதனால் தைராய்டு குறைநிலை ஏற்படுகிறது. கிரேவ் நோய், ஆண்களைவிட பெண்களுக்கு எட்டு மடங்கு அதிகமாக வருகிறது; பொதுவாக, இதனால் தைராய்டு மிகுதிநிலை ஏற்படுகிறது.

தைராய்டு நோய்க்கான மருத்துவப் பரிசோதனையை எந்தளவு அடிக்கடி செய்ய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன; என்றாலும், பிறந்த குழந்தைகளுக்குப் பரிசோதனை செய்வது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. (“பிறந்த குழந்தைகளுக்கு ஒரு முக்கியப் பரிசோதனை” என்ற பெட்டியைக் காண்க.) தைராய்டு சுரப்பி குறைவாக இயங்குவதை மருத்துவப் பரிசோதனை காட்டினால், அதைத் தாக்கும் ஆன்டிபாடிகளுக்கான பரிசோதனைகளைச் செய்துகொள்ளும்படி பொதுவாகச் சொல்லப்படுகிறது.

மறுபட்சத்தில், தைராய்டு சுரப்பி மிகுதியாக இயங்குவதை மருத்துவப் பரிசோதனை காட்டினால், தைராய்டு ஸ்கேன் எடுக்கும்படி சொல்லப்படுகிறது; ஆனால், கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஸ்கேன் எடுக்கும்படி பரிந்துரைக்கப்படுவதில்லை. தைராய்டு கட்டிகள் இருப்பது தெரிந்தால், அவை புற்றுநோய் கட்டிகளா என்பதை உறுதிப்படுத்த உடல் திசு ஆய்வு (biopsy) செய்யும்படி சொல்லப்படலாம்.

சிகிச்சை அவசியமாகும்போது


தைராய்டு மிகுதிநிலைக்குச் சிகிச்சை எடுக்கும்போது, இதயப் படபடப்பு, தசை நடுக்கம், கவலை போன்றவை குறையலாம். தைராய்டு செல்களை அழிப்பதற்கான வேறு சிகிச்சைகளும் உள்ளன; அவை, தைராய்டு சுரப்பி குறைவான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு உதவுகின்றன. சில சமயங்களில், தைராய்டு சுரப்பியையே அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கலாம்.

தைராய்டு குறைநிலை உள்ளவர்களுக்கோ தைராய்டு அகற்றப்பட்டவர்களுக்கோ, பொதுவாக T4 ஹார்மோன் மருந்தைத் தினமும் எடுத்துக்கொள்ளும்படி டாக்டர்கள் பரிந்துரை செய்கிறார்கள். சிகிச்சை பெறுகிற நோயாளிகளுக்குச் சரியானளவு மருந்தைக் கொடுப்பதற்காக, அவர்களை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். தைராய்டு புற்றுநோயை மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை, கீமோதெரப்பி, கதிரியக்க அயோடின் போன்றவற்றின் மூலம் சரிசெய்யலாம்.

சாரா, ஹார்மோன் மாற்றீடு சிகிச்சைக்காக T4 ஹார்மோன் மருந்தை எடுத்துவருகிறார்; அதோடு, சமச்சீர் உணவைச் சாப்பிட ஓர் உணவு நிபுணர் அவருக்கு உதவியிருக்கிறார். இவற்றால், நல்ல பலன்கள் கிடைத்திருக்கின்றன. சாராவும் மற்றவர்களும் புரிந்துகொண்ட உண்மை இதுதான்:

தைராய்டு அளவில் சிறியதாக இருந்தாலும் முக்கியத்துவத்தில் பெரியது. அதனால், உங்களுடைய தைராய்டை நன்கு கவனித்துக்கொள்ளுங்கள்; போதுமான அயோடின் உள்ள உணவைச் சாப்பிடுங்கள், கடும் மன உளைச்சலைத் தவிர்க்க முயலுங்கள்; மொத்தத்தில், உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு முழு முயற்சி செய்யுங்கள்.

[அடிக்குறிப்புகள்]

தைராய்டு குறைநிலையால் கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் ஏற்படலாம்; என்றாலும், தைராய்டு நோயுள்ள பெரும்பாலான பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். ஆனாலும், இந்நோயுள்ள ஒரு தாய் ஹார்மோன் மாற்றீடு சிகிச்சை எடுத்துக்கொள்வது முக்கியம்; ஏனென்றால், வயிற்றிலுள்ள குழந்தை ஆரம்பக் கட்டத்தில் அம்மாவின் தைராய்டு ஹார்மோனையே சார்ந்திருக்கிறது.

T3 என்பது மூவயடோதைரானின், T4 என்பது தைராக்ஸின். 3, 4 என்ற எண்கள் அந்த ஹார்மோனிலுள்ள அயோடின் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. கால்சிடோனின் என்ற ஹார்மோனையும் தைராய்டு உற்பத்தி செய்கிறது; இது, இரத்தத்திலுள்ள கால்சியத்தின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

குறிப்பிட்ட எந்தவொரு சிகிச்சையையும் விழித்தெழு! பரிந்துரைப்பதில்லை. உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருக்குமோ என சந்தேகித்தால், அதைத் தடுப்பதிலும் அதற்குச் சிகிச்சை அளிப்பதிலும் அனுபவமுள்ள ஒரு மருத்துவரைச் சந்தியுங்கள்.

ஒருவர் ஏற்கெனவே தலையிலும் கழுத்திலும் கதிர்வீச்சு சிகிச்சை பெற்றிருந்தால், அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறவினர்களைக் கொண்டிருந்தால் அவருக்குப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது.

[பக்கம் 23-ன் சிறுகுறிப்பு]

ஒரு காரின் வேகத்தை ஆக்சிலரேட்டர் கட்டுப்படுத்துவது போல உடலின் வளர்சிதை மாற்றத்தின் வேகத்தை தைராய்டு ஹார்மோன்கள் கட்டுப்படுத்துகின்றன

[பக்கம் 25-ன் சிறுகுறிப்பு]

தைராய்டு நோய் படிப்படியாகவும் புலப்படாத விதத்திலும் ஏற்படலாம்; ஆகவே, பல வருடங்களாக அந்நோய் இருப்பது ஒருவருக்குத் தெரியாமல் போகலாம்

[பக்கம் 24-ன் பெட்டி/படம்]

பொதுவான அறிகுறிகள்


தைராய்டு மிகுதிநிலை: மிதமிஞ்சிய மனக்கலக்கம், உடல் அதிகமாக இளைத்தல், இதயம் படபடத்தல், அடிக்கடி மலம் கழிதல், ஒழுங்கற்ற மாதவிடாய், எரிச்சல், கவலை, மனநிலையில் திடீர் திடீர் மாற்றங்கள், பிதுங்கிய விழிகள், தசைகள் பலவீனமடைதல், தூக்கமின்மை, முடி மெல்லியதாகி முறிதல்.*

தைராய்டு குறைநிலை: உடலும் மனதும் மந்தமாதல், உடல் அதிகமாகப் பருத்தல், முடி கொட்டுதல், மலச்சிக்கல், குளிர் தாங்க முடியாமற்போதல், ஒழுங்கற்ற மாதவிடாய், மனச்சோர்வு, குரலில் மாற்றம் (கரகரத்த அல்லது தாழ்ந்த குரல்), ஞாபக சக்தி குறைதல், களைப்பு.

[அடிக்குறிப்பு]

சில அறிகுறிகளுக்கு வேறு உடல்நல பிரச்சினைகளும் காரணமாக இருக்கலாம். ஆகவே, உங்களுக்குச் சுகமில்லை என்றால் கண்டிப்பாக டாக்டரைச் சந்தியுங்கள்.

[பக்கம் 24-ன் பெட்டி]

பிறந்த குழந்தைகளுக்கு ஒரு முக்கியப் பரிசோதனை

பிறந்த குழந்தைகளிடமிருந்து சில சொட்டு இரத்தத்தை எடுத்துப் பரிசோதித்துப் பார்த்தால் தைராய்டு பிரச்சினை இருக்கிறதா என தெரிந்துகொள்ள முடியும். பிரச்சினை இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தால், டாக்டர்கள் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.

தைராய்டு ஹார்மோன்கள் போதுமானளவு இல்லாதிருந்தால், உடல் வளர்ச்சிக் குறை நோய் (கிரெட்டனிஸம்) வந்துவிடும்; அதனால், குழந்தைகளின் உடலும் மனமும் வளர்ச்சியடையாமல் போய்விடும். ஆகவே, பிறந்த சில நாட்களிலேயே குழந்தைகளுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

[பக்கம் 25-ன் பெட்டி/படம்]

நீங்கள் சத்துள்ள உணவைச் சாப்பிடுகிறீர்களா?

சத்துள்ள உணவைச் சாப்பிடுவது தைராய்டு பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். உதாரணமாக, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு அத்தியாவசியமான அயோடின் உங்களுடைய உணவில் போதுமானளவு இருக்கிறதா? உப்புநீர் வாழ் மீன்களிலும் பிற கடல் உணவுகளிலும் இது மிகுதியாகக் காணப்படுகிறது.

காய்கறிகளிலும் இறைச்சியிலும் உள்ள அயோடினின் அளவு மண்ணிலுள்ள ரசாயனச் சேர்மத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. உணவில் அயோடின் குறைவுபடுவதைச் சரிகட்ட உப்பில் அதைச் சேர்க்கும்படி சில அரசாங்கங்கள் வலியுறுத்துகின்றன.

தைராய்டு சரிவரச் செயல்படுவதற்குத் தேவையான மற்றொன்று செலீனியம். T4 என்ற ஹார்மோனை T3 ஹார்மோனாக மாற்றும் என்ஸைமின் பாகமாக இந்த ரசாயனத் தனிமம் உள்ளது. காய்கறிகள், இறைச்சி, பால் போன்றவற்றிலுள்ள செலீனியத்தின் அளவு மண்ணைப் பொறுத்து மாறுபடுகிறது.

கடல் உணவிலும் பிரேசில் நட் எனப்படும் ஒருவகை கொட்டையிலும் செலீனியம் அதிகமாக உள்ளது. உங்களுக்கு தைராய்டு பிரச்சினை இருப்பதுபோல் தெரிந்தால் டாக்டரை அணுகுங்கள்; நீங்களாகவே ஏதாவது சிகிச்சை எடுத்துக்கொள்ள முயலாதீர்கள்.

[பக்கம் 24-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

மூச்சுக்குழல்

குரல்வளை

தைராய்டு

மூச்சுக்குழல்

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்